சிறைச்சாலையில் உன்னை சந்திக்கும் தேவன்
"யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்." II நாளா 36:9.
யோயாக்கீன் என்பதற்கு "தேவன் என் பாதுகாவலர்" என்று அர்த்தம். ஆனால் பெயருக்கு ஏற்ற படி இந்த இராஜா தேவனை சார்ந்து வாழவில்லை. தன் தகப்பன் யோயாக்கீம் செய்த படி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான். II இராஜா 24:9. இவன் தந்தையின் பொல்லாப்பினிமித்தமும், இஸ்ரவேல் ஜனங்களின் பொல்லாபினிமித்தமும் தேவ கோபம் யூத ஜனங்கள் மேல் பற்றியெரிந்தது. இவன் தகப்பன் ஜனங்களை அநியாயமாய் நியாயம் விசாரித்தான். யூதர்கள் பாவம் செய்ததினிமித்தம் பாபிலோனுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்று உரியா மற்றும் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் தேவன் தீர்க்கதரிசனமாக பேசியிருந்தார். ஆனால், அதை அசட்டைப் பண்ணின இவன் தகப்5பன் உரியா தீர்க்கதரிசியை கொலை செய்தான். அதுமட்டுமின்றி, பாபிலோன் சிறையிருப்பை குறித்து எரேமியா தீர்க்கதரிசி எழுதியிருந்த சுருளையும் சுட்டெரித்தான். அதே வழியில் நடந்த யோயாக்கீன் தன்னுடைய 18-வது வயதில் ராஜாவானான். 3 மாதமும் 10 நாட்களும் ஆட்சி செய்தவன் பாபிலோனியர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டான். 37 வருடம் சிறையிருப்பில் இருந்தான். ( எரே 52:31)
- இராஜ அலங்காராத்தில் இருந்த யோயாக்கீனுடைய வாழ்க்கை ஒரே நாளில் அடிமையின் ரூபமாய் மாறியது. இராஜ வஸ்திரங்கள் களைந்து அடிமையின் வஸ்திரம் கொடுக்கப்பட்டது. இராஜ போஜனம் மறுக்கப்பட்டு அடிமையின் போஜனம் கொடுக்கப்பட்டது. அரண்மனையில் வாழ்ந்த அவன் சாமானிய மக்களுடன் அடிமையாய் வாழ்ந்தான். 37 வருடங்கள் சிறைச்சாலையில் தன் வாழ்வை கழித்தான். ஆனால் அது அவனுடைய முடிவாக இருக்க வில்லை. அவனுடைய சிறையிருப்பின் 37- ஆம் வருடம் 12-ஆம் மாதம் 27-ஆம் தேதி தேவன் அவனை நினைவு கூர்ந்தார். அத்தனை வருடங்களாய் இருந்த அவனுடைய புலம்பலுக்கு முடிவு கொடுத்தார். அவனுடைய சாம்பலின் வாழ்க்கையை சிங்காரமாய் மாற்றினார். எரே 52:31-ல் பாபிலோனின் இராஜாவாகிய ஏவில் மெரொதாத் மூலம் தேவன் எவ்வாறு யோயாக்கீனின் வாழ்வை மாற்றினார் என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. முதலாவது,
* யோயாக்கீன் சிறைச்சாலையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டான்,
* அவன் தலை அந்நிய தேசத்தில் உயர்த்தப்பட்டது.
* இராஜா அவனுடன் அன்பாய் பேசினான், நேசித்தான்.
* சிங்காசனம் கொடுக்கப்பட்டது.
* சிறையிருப்பு வஸ்திரம் மாற்றப்பட்டு இராஜ வஸ்திரம் கொடுக்கப்பட்டது.
* மீண்டும் இராஜ போஜனம் கொடுக்கப்பட்டது.
* அவன் செலவுக்கான பணம் இராஜாவின் மூலம் அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் கொடுக்கப்பட்டது.
அன்பானவர்களே, யோயாக்கீனைப் போல நீங்களும் ஒரு வேளை சொத்து, உறவுகள், மதிப்பு, சுகம், வேலை ஆகிய அனைத்தையும் இழந்திருக்கலாம். தேவனின் மீதுள்ள உங்கள் நம்பிக்கையை கூட நீங்கள் இழந்திருக்கலாம். சோர்ந்து போகாதீர்கள் பிரியமானவர்களே! தேவன் உங்களை சந்திக்கும் நாட்களில் நீங்கள் வந்துள்ளீர்கள். யோயாக்கீனை சந்தித்து அவன் சிறையிருப்பை மாற்றி புதிய வாழ்க்கையை அவனுக்கு கொடுத்து அவனை அலங்கரித்த தேவன் உங்களை சந்திக்க போகிறார். உங்கள் சாம்பல் சிங்காரமாய் மாறும். உங்களை அலங்கரிக்கப் போகிறார். நீங்கள் இழந்த அனைத்தையும் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். ஏசா 61:7- ன் படி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !!! ஆமென்....
Amen thank you Jesus
ReplyDeleteGod Bless you
DeletePost a Comment