ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். நான் இன்றும் ஜீவனோடு இருப்பது அவரின்
மகா இரக்கத்தினால் தான். என் வாழ்வில் தேவன் செய்த நன்மைகள் பல உள்ளன அவை அனைத்தையும்
சொல்லிமுடிய என் வாழ்நாள் போதாது. அவ்வற்றில் ஒரு நன்மையை பகிரும்படியாக தேவன் சொன்னதினால்
இதை எழுதியுள்ளேன். அந்நிய தெய்வத்தை வணங்கி கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்தேன்.
குடும்பத்தின் வறுமை மகா கொடியதாய் இருந்ததினால் என்னை பராமரிக்க என் பெற்றோருக்கு
போதிய வசதி இல்லாததினால் என்னை என் தாயின் உறவினர்களிடம் வளர்க்குமாறு ஒப்படைத்தனர்.
ஒன்றும் அறியாத பருவத்தில் வளர்த்தவர்களை தெய்வமாக எண்ணினேன் ஆனால் தாயை போல் கவனிக்க
வேண்டிய அவர்கள் வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் என்னை அடித்து பலவாறு துன்பப்படுத்தினர்.
அடி தாங்க முடியாமல் பல மணிநேரம் தேம்பி தேம்பி அழுததின் விளைவால் என் மூளையின் நரம்புகள்
பாதிக்கப்பட்டு வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டேன். 2½ வயதில் முதல் தொடர்ந்தேச்சியாக
பல வருடங்கள் அந்த நோய் என்னை மிகவும் வாட்டி வதைத்தது. எப்போது வலிப்பு வருமென்றே
தெரியாது. நன்றாக விளையாடி கொண்டிருபேன் திடீரென வலிப்பு ஏற்பட்டு கண்கள் மேலே போய்
வாயில் நுரைதள்ளி சுயநினைவு இழந்து கிடப்பேன்.அவ்வாறு வந்துவிட்டால் மருத்துவமணையில்
சேர்த்து கைகளிலும், கால்களிலும் குளுகோஸ் போட்டால் பல மணிநேரம் கழித்து சுயநினைவு
வரும். அதற்குள் 15000 ரூபாய் செலவாகிவிடும். இவ்வாறு அடிக்கடி ஏற்பட்டதால் என் மூளை
நரம்புகள் மிகவும் பாதிப்படைய தொடங்கியது. எனக்கு 7 வயதாய் இருக்கும் போது என் குடும்பம்
இயேசுவை ஏற்றுக்கொண்டது. என் வியாதி நீங்க நாங்கள் பார்க்காத மருத்துவம் இல்லை. பல
ஊர்களில் சென்று தங்கி மருத்துவம் பார்த்துள்ளோம். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. இவ்வாறான
சூழ்நிலையில் எனக்கு 12 வயது இருக்கும் போது மருத்துவர் இன்னொரு முறை வலிப்பு வந்தால்
உயிரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று கூறிவிட்டார்கள். ஆனால் மருத்துவர் எச்சரித்த
பின்னும் எப்போதும் போல வலிப்பு வந்தது. எப்போதும் போல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்
குளுகோஸ் போடப்பட்டது ஆனால் இந்த முறை என் சுயநினைவு திரும்பவில்லை. நான் இறந்துவிட்டதாக
மருத்துவர் உறுதி செய்தனர். உலக தோற்றத்திற்கு முன்பதாகவே என்னை முன்குறித்த தேவன்
என்னை மறக்கவில்லை. அப்போது என் தாய் அன்னாளை போல மன்றாடி ஆண்டவரே என் மகளுக்கு ஜீவனை
கொடுத்தால் உம்முடைய ஊழியத்திற்கு அர்பணிக்கிறேன் என்று பொருத்தனை செய்து ஜெபித்தார்கள்.
தேவன் அவர்களின் ஜெபத்தை கேட்டு பல மணிநேரத்திற்கு பிறகு எனக்கு மீண்டும் ஜீவனை கொடுத்தார்
ஆமென்!! அன்றிலிருந்து இன்று வரை அந்த கொடிய நோயின் அறிகுறி கூட என்னிடம் இல்லை.
நீங்களும் பலவித பிரச்சனைகளுடன் போராடிக்கொண்டிருக்கலாம்
தேவன் உங்களை விடுவிக்க வல்லவர். உங்களை ஜெபத்தை கேட்கிறார், உங்கள் கண்ணீரை காண்கிறவர்
நிச்சயம் உங்களுக்கு பதில் தருவார். அற்புதம் செய்வார். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
ஷாலோம்!!

Post a Comment